ஒரு தேர்தல் இரண்டு வெற்றிகள் சாத்தியமா?

ஒரு தேர்தல் இரண்டு வெற்றிகள் சாத்தியமா?
Published on

‘நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யார் வெற்றி பெறுவார்கள்?'' - என்கிற கேள்வி ஒருபக்கம் சூட்டைக் கிளப்புகிறது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் அக்னிப்பிழம்பாக கொதிப்பது, ‘‘ 18 தொகுதி இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?'' என்கிற எளிய கேள்வி தான்.

 சென்ற 2016ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் ஒரு சதவிகிதம் தான் என்பதைத் தெரிந்து கொண்டால், சென்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி ஆற்றிய சேவை யாருக்கானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

மு.க.ஸ்டாலினி
மு.க.ஸ்டாலினிஅந்திமழை

நாடு முழுவதும் மோடி அலை அடித்த 2014 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 37 தொகுதிகளைக் கைப்பற்றியபோது பெரும் சரிவைச் சந்தித்தது தி.மு.க. சுமார் 22.5 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றியபோதும் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

ஆக - 2014 ல் பெற்ற பலத்த அனுபவமும், 2016 ல் கிடைத்த கனமான அனுபவமும் தற்போதைய தேர்தலில் கூட்டணியைத் தகுந்தபடி அமைப்பதற்கு தி.மு.க.விற்கு வழிவகுத்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

முதலில் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினின் ஆளுமையின் கீழ் சந்திக்கிற தேர்தல் இது. அதனால் கூட்டணியில் பல நெளிவு சுளிவுகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பா.ம.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தது. தே.மு.தி.க. தலைவரான விஜய்காந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கப்போய் அப்படியே அரசியலையும் பேசிவிட்டு வர வேண்டியிருந்தது. வாசனின் வருகைக்காகவும் காத்திருந்தது. இதுவரை இல்லாத இலகுத்தன்மையுடன் ஸ்டாலின் இருந்ததையே இது உணர்த்துகிறது.

திருமாவளவன்
திருமாவளவன்அந்திமழை

காங்கிரஸைத் தொடர்ந்து ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக்கட்சி என்று எட்டுக் கட்சிகளைக் கூட்டணியில் இணைத்துப் பலப்படுத்தியதோடு கூட்டணிக்கட்சிகளில் சிலவற்றை உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த வைத்திருப்பது தி.மு.க.வின் பலம். இதை எடப்பாடியார் கடுமையாக விமர்சிக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திஅந்திமழை

சென்ற தேர்தலில் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்த தி.மு.க கூட்டணி அமைத்த விதத்திலேயே தேர்தலைச் சந்திக்கும் முன்பே தன்னுடைய வலுவை வாக்குச் சதவிகித அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

மு.க. ஸ்டாலின் பிரசாரத்தின்போது திரள்கிற மக்கள் திரள், கிராம அளவில் திட்டமிட்டுத் தன்னுடைய நிர்வாகிகளைக் களத்தில் இறக்கிக் கீழ்மட்ட அளவில் செய்த பிரசாரம், ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் எதிராக முன்வைக்கிற வலுவான வாதங்கள் --- எல்லாமே தி.மு.க.வுக்குச் சாதகமான அம்சங்கள்.

ஜல்லிக்கட்டு துவங்கி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வரை தமிழகத்தில் நடந்தேறிய சில முரட்டுச் சம்பவங்களின் எதிரொலியாகப் பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரான வெறுப்புணர்வை தனக்குச் சாதகமானதாக மாற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க என்றே சொல்ல வேண்டும். பேச்சை விதைப்பதற்கு முன்பே அதை உள்வாங்கிக் கொள்ளும் ஈரமான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி என்று பொருளாதார ரீதியில் பா.ஜ.க. அரசு செய்த சோதனை முயற்சிகளுக்குப் பலிகடா ஆனது சிறு, குறு தொழில் செய்தவர்களும், அன்றாடங்காய்ச்சிகளும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த லட்சக் கணக்கான ஊழியர்களும் தான். தொலைக்காட்சி விவாதங்களில் அதீத நம்பிக்கையுடன் காணப்படும் பா.ஜ.காவின் பேச்சாளர்களின் குரல்கள் மக்களிடம் எடுபடாது என்கிறார் தினகரன் கட்சிப்பிரமுகர்.தமிழகத்தில் பா.ஜ.கவின் வேட்பாளர்களில் இருவர் மட்டுமே நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்று தகவல்.

ஒக்கி,கஜா என்று இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தை அலைக்கழித்துப் பெரும் பொருளாதாரச் சீர்குலைவைச் சந்தித்தபோது கூட மத்திய அரசைப் பிரதிநிதித்துவப் படுத்தி பாரதப் பிரதமர் தங்களை வந்து பார்க்கவில்லை என்பதும், போதுமான நிதியை உரிய காலத்தில் வழங்கவில்லை என்பதும் பொதுமக்கள் மத்தியில் காயமாக பதிந்திருக்கின்றன.

இந்த எதிர்ப்புணர்வை எந்த எதிர்க்கட்சியும் உருவாக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம். மத்தியில் ஆளும்கட்சியே தேடிக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்அந்திமழை

தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசும் தங்களைத் தற்காத்துக் கொள்வதில் காட்டுகிற அக்கறையை தமிழக மக்கள் நலனில் காட்டி மத்திய அரசை வற்புறுத்திப் பெற வேண்டிய வாய்ப்பை இழந்துவிட்டன.

அ.தி.மு.க வும் முன்பு மாதிரி தேர்தல் வாக்குறுதியை நம்பாமல், வாக்காளர்களுக்கு முடிந்த அளவுக்கு இரண்டாயிரம் ரூபாயைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிகாரபூர்வமாகக் கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டியது. வாக்காளர்களை அதுவே திருப்திப்படுத்திவிடும் என்கிற எதிர்பார்ப்பு ஆளும்கட்சிக்கு இருந்திருக்கலாம். தேர்தல் நெருங்கும்போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்கான வாய்ப்பை கட்சிகள் நம்பியிருப்பது குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றாலும், தமிழக மக்களை அப்படியெல்லாம் ஏமாற்றி விட முடியுமா?

நேற்றுவரை அ.தி.மு.க.வை மிகவும் கொச்சையாக விமர்சித்து வந்த பா.ம.க. அதே அ.தி.மு.க கூட்டணியில் வந்து சேர்ந்ததை ஊடகங்கள் மறந்தாலும், மக்கள் மறந்துவிடுவார்களா? கூட்டணியில் சேருகிறவரை அ.தி.மு.க.வை விமர்சித்த தே.மு.தி.க.வின் கதியும் இது தான். கழகங்கள் இல்லாத தமிழகம் என்று தொடர்ந்து சொல்லிவந்த பாஜகவும் இன்று அதே கழகங்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், மனித நேய மக்கள் கட்சியும், இதர முஸ்லிம் அமைப்புகளும், கிறித்துவ இயக்கங்களும் தி.மு.க. கூட்டணிக்குப் பலம்சேர்ப்பதோடு, தலித் சமூகத்தினரின் வாக்குகளும் பெருவாரியாகக் கிடைக்க வாய்ப்பிருப்பது தி.மு.க.வுக்குச் சாதகமான அம்சம். இது தவிர பா.ம.க.வின் வாக்குவங்கியைச் சேதப்படுத்துகிற விதத்தில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக்கட்சியும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் 2ஜி வழக்குடன் தொடர்புடைய சாதிக்பாட்சாவின் வழக்கு தூசி தட்டி எடுக்கப்படுகிறது. தினகரன் நாளிதழ் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இன்னும் கூட சில வழக்குகள் நினைவுக்கு வந்து தூசி பொதுவெளியில் பரப்பப்படலாம்.

முத்தரசன்
முத்தரசன்அந்திமழை

சரி, தி.மு.க கூட்டணியில் பிரச்னைகளே இல்லையா என்கிற கேள்வி எழுப்பப் பட்டால் அதையும் இல்லையென மறுக்க முடியாது. தி.மு.க.வில் கலைஞர் குடும்பத்தில் கனிமொழி, தயாநிதி மாறன் தவிர, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி என்று பலரின் வாரிசுகள் களம் இறங்கியிருக்கிறார்கள் என்பதைவிட, இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு சரிவுதான். தொகுதி ஒதுக்கீட்டில் இ.பி.எஸ் தனக்கு வேண்டியவர்களை ஓரளவு மகிழ்வுடன் வைத்திருப்பதாகவும், ஓ.பி.எஸ் தன்னை நம்பியவர்களை கைவிட்டதால் தென் தமிழகத்தில் தினகரன் கை ஓங்குமென்கிறார்கள். இ.பி.எஸ் & ஓ.பி.எஸ். குரூப்பிடையே ஒத்துழைப்பில்லை, அதிருப்தியிலுள்ள அ.தி.மு.கவினர் தினகரனோடு ரகசிய தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது.

அதே போல் ஏழு தொகுதிகளில் தி.மு.கவினரிடையே அதிருப்தி நிலவுதாகவும், சம்பந்தபட்டவர்களிடம் மு.க. ஸ்டாலின் வெற்றியை கோட்டை விட்டால் நடவடிக்கை நிச்சயம் என்று கறாராக சொல்லியிருப்பதாக தகவல்.

சென்ற சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கிற்குக் கொடுத்த அழுத்தத்தை இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தி.மு.க அழுத்தம் கொடுக்கவில்லை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, கூடவே நடக்கவிருக்கிற பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிக்கு மதுவிலக்கு உதவியிருக்கலாம்.

சில குறைகளைத் தவிர்த்து வெப்பம் தகிக்கிற நேரத்தில் கூடுதல் வெப்பத்தோடு நடக்கிற தேர்தல் களத்தில் தி.மு.க கூட்டணி 25 லிருந்து 30 தொகுதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைத் தான் எடுத்துக் காட்டுகிறது கள யதார்த்தம். பணத்தைச் செலவழித்தாவது எட்டிலிருந்து பத்து தொகுதிகள் வரை தாங்கள் ஜெயித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது மாநில ஆளும்கட்சி. ஆனால் அதையும் மீறித் தீர்மானிக்கிறவர்கள் தமிழக மக்கள்.

 ரகசிய சக்தியாக டிடிவி தினகரனின் அமமுக பிரிக்கப்போகும் வாக்குகள்  பல வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பதினெட்டு சட்டமன்றத்தொகுதிகளிலும், நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கூடுதல் வெற்றி கிடைத்தால்& ஒரே தேர்தலில் நாடாளுமன்றத்திலும் தி.மு.க. பலப்படும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அது மாறும் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com